August 22, நுருசன் கிராமம், 9pm

IMAG0133காலையில் தோர்ஜேவிடம் இன்றைய இலக்கைப்பற்றி கேட்டபோது, கையை நீட்டி கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே இருந்த சிறு குன்றை காட்டினான். கண்ணுக்கு, பொங்குநாகுவிலிருந்து சிறு தூரத்தில் த்சோகர் ஏரி, ஏரியின் மறுபக்கத்தில் அந்த குன்று, என்றுதான் பட்டது. மெதுவாக சென்றாலும் மூன்றுமணி நேரத்தில் சென்றுவிடுவோமென்று எண்ணி பல்தேவும் நானும் நடையை துவங்கினோம். பாலைவனத்தில் கண்ணுக்குத் தெரியும் எதுவும் மாயையே.

முதல் நிறுத்தம் த்சோகர் ஏரிக்கரை. பொங்குநாகுவிலிருந்து பாதை ஏரியை நோக்கிச்சென்று, பிறகு ஏரியை ஒட்டி, அதன் வளைவைச் சுற்றிவந்து எதிர்கரையில் மேட்டை ஏறி மேலே சென்றது. கண்ணுக்குமுன் இருந்தும், ஏரியை சென்றடைய ஒருமணி நேரத்துக்குமேலாகிவிட்டது. ஏரி காய்ந்து சுருங்கியிருந்தாலும், பெரிதாகவே இருந்தது. திப்பெத்திய மலைநாடோடிகள் ஆடுகளையும் யாக்குகளையும் மேய்த்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் நூறுக்கு மேற்பட்ட ஆடுகள். ஒவ்வொரு கூட்டத்தைக்காக்கவும் ஒரு கறுநிற நாய். ஏரியின் ஓரத்தில், இந்த குளிர்பாலையில், கரையில் படர்ந்த புல்தரை.

 IMAG0139

ஏரியை கடந்ததும் ஆரம்பமானது உண்மையான பாலைவனம். சுற்றி தொடுவானம் வரை வரண்ட பூமி. ஈரமேயில்லாத மணல்பரப்பு. அதில் ஒரு அடிக்கு, இரண்டு புல்நுனிகளுடன் ஒரு தளிர். நான் பார்த்தவரையில், மிக குறைந்த ஆள் நடமாட்டம் கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பு. வழியில் ஆட்டின், குதிரையின் உலர்ந்த சடலங்கள் கிடந்தன. சடலங்களின் முகங்களில் உக்கிரமான ஒரு பீதி. பலிகடாவின் கழுத்தில் அரிவாள் விழும் அக்கணம், அதன் அகத்தில் கிளம்பும் பயத்தின் உச்சத்தைப்போல. எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்ட பெருவலியின் வெளிப்பாடு. அவை கொல்லப்பட்ட மிருகங்கள், ஆகாரமில்லாமல் மரிந்தவை அல்ல.

பாலையின் முடிவிலிருந்து திருமபிப்பார்த்தால் நேற்று மதியம் ஷிபுக் கணவாயிலிருந்து சமவெளியில் இறங்கிய புள்ளிவரை துல்லியமாக தூரத்தில் தெரிந்தது. ஒரே பரந்த நிலப்பரப்பில் கடந்த எட்டுமணி நேரமாக நடந்து கொண்டிருந்தோம். இன்று மட்டும் ஐந்து மணிநேரம் நடந்திருந்தோம். திடீரென்று முழூ உலகுமே ஒரு விதத்தில் அதேபோல் ஒரே பரந்த நிலப்பரப்பு தானே என்று தோன்றியது.

 IMAG0140

முன்னால் பாலைவனம் ஒரு மட்டத்தில் முடிந்து மண் குடிசைகள் தெரிந்தன. ஒருமணிநேரத்தில் சென்றடையக்கூடிய தொலைவு. கால்களை மெல்ல மெல்ல நகர்த்தி சென்றோம். குடிசைகளின் பின்னாலிருந்த மலைகளின் மேல் கறுநிற மேகங்கள் குவிந்திருந்தன. நுருசனை நுழையும் பொழுது ஒரு ராட்சச காற்று பூறப்பட்டது. புயலில் எலும்புகள் நடுங்கின. காற்றை எதிர்த்து நடக்க முடியவில்லை. கிராமத்தின் நுழைவாயிலேயே ஒரு பெரிய கொட்டகை தெரிந்தது. பல்தேவும் நானும் அதில் புகுர்ந்த உடனேயே மழை கொட்ட ஆரம்பித்தது. அது ஒரு குதிரைக் கொட்டகை. கதவுகளில் தாள்களில்லை. ஒரு பாறையை வைத்து காற்றில் பேயாட்டமாடிக்கொண்டிருந்த கதவை அடக்கி வைத்தோம். கொட்டகையின் பாதி, வைக்கோல் நிறம்பியிருந்தது. மீதியில் முன்பு வேறெவரோ மழைக்காகவோ இரவைக்கழிக்கவோ ஒதுங்கியிருந்த அறிகுறிகள். மாகியின் காலி ப்லாஸ்டிக் தாள்கள், பாதி குடித்திருந்த கோககோலா புட்டிகள். திரவம் வினோதமான நிறத்திற்கு மாறி நுரையாயிருந்தது. உள்ளே அமர்ந்து தகரத்தின் ஓட்டைகளின் வழியே மழையின் திசையையும் விசையையும் யூகித்துக்கொண்டிருந்தோம். ஒருமணிநேரம் கழித்து மழையும் காற்றும் தளர்ந்தன. குளிர்ந்த மாலை நேரம். நுருசனில் ஓடும் நதியின் கரையில், தோர்ஜேவும் சமீரும் நிறுவியிருந்த கேம்பை வந்துசேர்ந்தோம்.

இரவு தோர்ஜே மற்றும் சமீருடன் அவர்களின் கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். தோர்ஜேவின் சொந்த ஊர் சாங்தாங் பகுதியில் பாங்கோங் ஏரியின் அருகில் ஒரு கிராமம். தந்தை அரசு மறுத்துவ நிபுணர் (ஆனால் டாக்டரல்ல). அவனுக்கு ஒரு அண்ணன். அவனைப்பற்றி பெரிதும் பேச நேரவில்லை. ஒரு சுவாரசியமான தம்பி. தோர்ஜே ஜம்முவில் பி.ஏ. ஆங்கில இலக்கிய பட்டத்திற்காக படித்துக்கொண்டிருக்கிறானென்று பெயர். கோடை பருவத்தில் லே வந்து மலைநடை வழிகாட்டியாக வேலை செய்கிறான். நடையில் செல்லும் ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ஊதியம். அக்டோபர் மாதம் ஜம்முவுக்குத் திரும்புவான். நண்பர்களுடன் சேர்ந்து ஜீப்பில் சென்றுவிடுவான்.

ஜம்முவில் நண்பர்களுடன் கல்லூரிக்குச் செல்கிறானோ இல்லையோ, தினமும் மதுக்கடைக்கு மாலை எட்டுமணிக்கு, கடையை மூடுவதற்கு முன் சென்றுவிடுவார்கள். டிசம்பரில் புதுச்சேரி சென்று ஃப்ரெஞ்சு கற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கிறான். ஆனால் செல்வதற்குமுன் ஜம்முவில் வருடம்தோரும் நடக்கும் கால்பந்து போட்டியில் விளையாடிவிட்டுத்தான் செல்வான். மலைநடை வேலையை அவன் செய்வதற்கு பணம் ஒரு காரணம். மற்றொன்று, அவனை முற்றிலும் கவர்ந்து, ஈர்த்து ஆட்கொண்ட இமயமலைகள்.

மலைகளில் நடக்கும் பொழுதும், கேம்பிலும், அந்த மலைகளின் நடுவில் இருக்கும், அனுபவிக்கும் ஒவ்வொரு கணமும் அவன் இமயத்தை சிறு குழந்தையின் பூரிப்புடன், உற்ச்சாகத்துடன் சந்திக்கிறான். அவ்வப்பொழுது என்னிடம் திரும்பி, “இந்த எடம் எவ்வளவு அட்டகாசமா இருக்குல்ல?!” என்று விரிந்த கண்களுடன் கேட்பான். என் அகத்தில் அந்த இடமும் காட்சியும் அளித்த அமைதியை அவனிடம் வார்த்தைகளில் சொல்ல நான் தடுமாறி, ஒரு புன்முறுவலுடன் நிறுத்திக்கொள்வேன்.

August 21, பொங்குநாகு கிராமம், 8.20pm

IMAG0131காலையில் திசலிங் சமவெளியிலிருந்து, புல்வெளியை ஒட்டியிருந்த மலைச்சரிவில் ஷிபுக் கணவாயை நோக்கி நடந்தோம். கணவாயிலிருந்து த்சோகர் ஏரி வரை இறங்கிவந்து, ஏரியின் கரையில் பொங்குநாகு என்ற கிராமத்தில் கேம்ப்.

ஷிபுக் கணவாயையேறும்முன், இந்த முறை கணவாயை நிதானமாக, உடலளவிலும் மனதளவிலும், சஞ்சலங்கள் ஏதும் இல்லாமல் கடக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்கு செய்ய வேண்டியது, ஒன்று, நடையில் ஒரு லயத்தைப் பிடித்து அதில் ஏற்றயிறக்கங்களின்றி செல்வது. இரண்டு, மனதை, புலன்களை, அந்தக்கணத்தில் சுற்றியிருக்கும் சூழலில் செலுத்தி, இலக்கை பற்றிய கவலைகளிலிருந்து அகற்றுவது.

மேலே வானின் உச்சியில், பென்சிலால் வரைந்ததுபோல ஜெட் ஏர்வேஸின் காலை விமானம் சென்றது. நடுவானில், தொலைந்த நிலங்களின் மேல், நாகரிகத்தின் ஒரு சிறு துளி. மலைகளின் நிசப்தத்தில், விமானத்தின் கர்ஜனை, விமானம் மறைந்த பிறகும் மிதந்துகொண்டேயிருந்தது.

இலக்கை அடையும் கடைசி அடிகளில் மனதின் உறுதியற்ற அற்பத்தனம் வெளிச்சத்துக்கு வருகிறது. அதுவரையிலும் நிதானித்துக்கொண்ட மனம், இலக்கை கண்ணால் கண்டதும் சமநிலையிழந்து துள்ளியது. கால்கள் வேண்டுமென்றே வேகத்தை குறைத்து மனதை சீண்டின. கணவாயை எட்டுவது தவிர்க்கமுடியாத நிகழ்வு போலும்.

ஷிபுக் கணவாயின் மேலிருந்து, தூரத்தில் மலைகளின் நடுவில், தவிட்டுநிறமும் நீலநிறமுமாய், த்சோகர் ஏரி ஒளிந்திருந்தது தெரிந்தது. ஏரியைச்சுற்றி அமர்ந்திருக்கும் மலைகளின் பிம்பம் தான் ஏரியில் தெரிந்த தவிட்டுநிறம். கணவாயிலிருந்து பாதை மெல்ல மலையோரமாக கீழே சரிந்து சென்றது. இடது பக்கம், மெல்லிய நீரோட்டம் ஒன்று, எங்களைப்போல் ஏரியை நோக்கி வழிந்தது. நடந்து சென்றுகொண்டிருக்க, ஏரியை பார்வையிலிருந்து விலக்கியும், திரும்ப சேர்த்தும், பாதை உருண்டு சென்றது. அருகில் வரும்பொழுது ஏரியென்று எண்ணியது பெரும்பாலும் புல்தரையும் சதுப்புநிலமும்தான் என்று தெரிந்தது.

இறுதிகட்ட நடையில் மலையிலிருந்து பாதை இறங்கி, ஒரு மிகப்பெரிய புல்தரையின் எல்லையாக மாறியது. ஒரு முழூநகரத்தை நிறுவமுடியுமளவுக்கு சமவெளி ஒன்று பாதையிலிருந்து துவங்கி, மூன்று திசைகளில் விரிந்தோடி, தொடுவானில் நிற்க்கும் பனிமலைகளின் காலடிகளில் விழுந்தது. வெப்பத்தில் மலைகளின் பிம்பங்கள், மண்ணும் புல்லும் நிறைந்த கடலுக்கு அப்பால் மிளிர்ந்தன.

அங்கிருந்து பொங்குநாகுவை சென்றடையும் கடைசிகட்டத்தில் தார் சாலை ஒன்று பாதையை வெட்டிச்சென்றது. த்சோகர் ஏரி ரோடு வழியாக லேவிலிருந்து வந்தடையக்கூடிய இடம். ரும்ஸேவிலிருந்து ஜீப்பில் வந்திருந்தால் ஓரிரண்டு மணிநேர அவகாசத்தில் வந்து சேர்ந்திருப்போம். மூன்று நாட்கள் நடந்து வந்து சேர்ந்திருந்தோம்.

பொங்குநாகு கிராமம் ஏரியின் சற்றுமுன் பனியூற்றுகள் உறுவாக்கிய சதுப்புநிலத்தில் டென்டுகளின் குவியலாக கிடந்தது. ஏரி சுருங்கி விட்டிருந்ததால் தூரத்தில் சதுப்பிலிருந்து சற்றே வேறுபட்டு தெரிந்தது. யாக்குகள் புல்தரையின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.

பாராஷூட் டென்டில் சாப்பாட்டு சரக்குகளும் பியரும் விற்கிறார்கள். தோர்ஜேவும் சமீரும் சேர்ந்து பியர் குடிக்கச் சென்றார்கள். அங்கு ஒரு முதியவர் ஆட்டுக்குட்டியின் தோலால் ஒரு தொப்பியை செய்து கொண்டிருந்தார். சிரித்துக்கொண்டே வேலைப்பாடை பற்றி சிறிது நேரம் பிரசங்கித்தார். எனக்கு ஒன்றும் எட்டவில்லை.

இரவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, டென்டின் வெளியே முழூநிலா ரகசியமாய் உதித்திருந்தது. சாப்பிட்ட பிறகு வெளியே சென்று காட்சியை பார்த்து ஸ்தம்பித்துப்போனேன். லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு விண்ணில் சிதறி உலகைச் சுற்றிவரும் துண்டு. இந்த முழூ நிலவை தேவனுடன் ஒப்பிட்ட ஆதிமனிதனை குறை சொல்ல ஏதுமில்லை.

August 20, திசலிங் புல்தரை, 9pm

IMAG0122இன்று இரண்டு கணவாய்களை கடந்தோம். ஏழுமணிநேர நடை. கியாமர் கணவாயின் கீழிருந்து நடை ஆரம்பித்தது. கீழே 4,200 மீட்டர் உயரத்திலிருந்து கணவாயில் 4,950 மீட்டர் உயரம் வரை ஏறி, கியாமர் கணவாயை எட்டினோம். பயணத்தின் முதல் கணவாய் என்பதனால் ஏறும்பொழுது மூச்சையும் நடையின் வேக்தையும் கட்டுப்படுத்தி சமநிலை செய்து ஏறும் பக்குவம் வந்து சேர்ந்திருக்கவில்லை. மூச்சு முட்டியது, ஏறவேண்டிய தூரத்தை கண்டு மனம் பொருமையிழந்து கால்களை வேகமாக நகர்த்தியபோது மூச்சின் சலனம் அதிகரித்து. அது மேலும் மனச்சோர்வில் முடிந்தது. ஒரு பயனில்லா உணர்ச்சிசக்கரத்தில் மாட்டிக்கொண்டேன். பிறகு செல்லவேண்டிய வழியில் சிறிய மைல்கற்களை மனதில் உருவாக்கிக்கொண்டேன். வழியில் அமர்ந்திருக்கும் குன்டு கூழாங்கல் அல்லது கற்களின் நடுவில் துளிர் விட்டிருக்கும் சிறுபுல்வெளி போல். ஆனால் மனம் உச்சியை பார்ப்பதற்கு பதிலாக இந்த மைல்கற்களை பார்த்து பொருமையை செலவழித்தது. அகத்தளவில் சலனம் குறையவில்லை.

பருவம் தவரிவந்த மழைமேகங்களின்பின் சூரியன் ஒளிந்திருந்தது. காற்றால் மேகங்களில் இடைவெளி வந்தபொழுது வெளிவந்தது. மேகங்கள் சூழ்ந்திருந்த பொழுது குளிர்ந்தது. நகர்ந்தபொழுது வெயில் சுட்டெரித்தது.

பல்லை கடித்துகொண்டு அடிமேல் அடிவைத்து எப்படியோ உச்சியை சென்றடைந்தேன். பொதுவாக லத்தாக் பகுதியின் மலைகணவாய்களில் கற்களை அடுக்கிவைத்து பிரார்த்தனைகொடி வரிசைகளை கட்டிவைத்திருப்பார்கள். எதற்காக என்று முன்பொருமுறை லக்பா என்ற வழிகாட்டியை கேட்டேன். திப்பெத்திய பௌத்தமத வழிபாட்டில் புத்தரை, தலாய்லாமாவை, மடாலயங்களில் உச்சியில் வைத்தே வழிபடுகிறார்கள். எந்த உச்சியும் அவர்களுக்கு புத்தரையும் தலாய் லாமாவையுமே குறிக்கிறது.

மறுபக்கம் சாங்தாங் பனிமலைகள் கம்பீரமாக நின்றன. இன்று திட்டத்தின்படி இரண்டு கணவாய்களை கடந்து இரவு திசலிங் என்ற புல்தரையில் கேம்பை அடையவேண்டும். கியாமர் கணவாயை ஏறிவந்து கடக்க செய்த எல்லா பிரயத்தனங்களையும் வீணடித்து மொத்தமாக மீண்டும் பாதை உச்சியிலிருந்து கீழே கூட்டிச்சென்றது. அங்கிருந்து வேறொரு மலையை ஏறி மந்தல்சன் கணவாயை கடக்க வேண்டும்.இரண்டாவது மலையை ஏறும்முன், தோர்ஜே-சமீருடன் சுளீர் லெயிலில், சிறு நீரோட்டத்தின் அருகே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது:

நான் (தோர்ஜேவிடம்) – ரெண்டாவது பாஸ் முதலைவிட கஷ்டமா ஈஸியா?

சமீர் – நிச்சயமா ஈஸிதான்.

தோர்ஜே, ஆலோசனை கூறும் பாவனையுடன் – நா ஒண்ணு சால்லுரென், no pain, no gain!

பல்தேவ், சிரித்துவிட்டு – நா வேறொண்ணு சொல்ரென், go hard or go home!

(மெல்லிய சரிப்பு பரவியது)

வேறொரு குழமத்தின் இத்தாலிய பயணி ஒருவன் முதல் கணவாயிலிருந்து மெல்ல இறங்கிவந்து எங்களை கடந்துசென்றான்.

இத்தாலியன், பொதுவாக – Hello!

தோர்ஜே, அவனிடம் – How are you? You still have mountain sickness? Your guide told me.

இத்தாலியன் – Well, I vomit twice this morning. So not good.

தோர்ஜே, சற்று யோசித்துவிட்டு, சிரித்துக்கொண்டே – I will tell you one thing. Go hard or go home!

எல்லோரும் வாய்விட்டு சிரிக்க இத்தாலியன் மட்டும் முழித்துவிட்டு நடையை கட்டினான்.

திருவாசகத்தை கேட்டுக்கொண்டே மந்தல்சன் கணவாயை ஏறிக்கொண்டிருந்தேன். சில பாடல்கள், பொல்லா வினயேன், மற்றும், பூவார் சென்னி மன்னன், மனதில் தீ போல் படர்ந்தன. மலையை ஏறும்பொழுது மனம் இங்குமங்கும் அலைந்தது. மந்தல்சன் கணவாய் கியாமரைவிட எனக்கு மேலும் கடினமாகவேயிருந்தது. பாடல்கள் ஏற்படுத்திய சஞ்சலம் பெரும் இடையூறாக அமைந்தது. மனதை கட்டுப்படுத்தி மூச்சை திடமாக பிரயோகிக்க முடியவில்லை. தலைவலியும் கிளம்பியது. ஒரு கல்லின்மேல் அமர்ந்து மூச்சை சமாதானம் செய்தேன். பாட்டை நிறுத்தினேன். பின்னால் வந்துகொண்டிகுந்த குதிரைக்காரர் என்னை ஊக்குவிக்க முயற்சித்தார். உச்சியை அடைய பத்து நிமிட நடைதான் என்றார். என்னுடன் வா, என்றார். சிரித்துவிட்டு தலைவலி என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டேன். பாடலை மாற்றினேன். புற்றில் வாழ் அரவம் அஞ்சே, காய்ந்த வாயில் தண்ணீர்போல் நெஞ்சில் பரவியது. உற்சாகமூட்டி என்னை தள்ளியது. உச்சியைச்சேரும் கடைசி மேட்டின் கீழிருந்து நிமிர்ந்தேன். காற்றில் படபடத்த பிரார்த்தனை கொடிவரிசை எட்டிப்பார்த்தது.

IMAG0125

மந்தல்சன் கணவாயிலிருந்து மெல்ல கீழே செல்லும் பாதை. கால்கள் களைப்பில் கனத்தன. புவியீர்ப்பின் கைகளை பிடித்துக்கொண்டு பாதையில் வேகமாய் கீழேசென்றேன். ஒரு திருப்பத்திற்க்கு பிறகு நிலப்பரப்பு அகன்று பெரும் புல்வெளியாய் உருமாறியது. விரிந்த பச்சை கம்பளத்தில் ஓரிரு வெள்ளை புள்ளிகள். திசலிங் கேம்பை கண்டுவிட்டாலும் புள்ளியாய் தெரிந்த டென்டுகளை சென்றடைய அதிகநேரமானதுபோலிருந்தது. இலக்கு கண்ணுக்குத்தெரிந்தும் கைகளில் சிக்காததனால்.

August 19, கியாமர் கணவாயின் கீழ், 8pm

IMAG0121இன்று எங்கள் மலைநடைப்பயணம் துவங்கியது. லேவிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் மனாலி நெடுஞ்சாலையிலிருக்கும் ரும்ஸே கிராமத்திலிருந்து நடை. எட்டு நாட்களில் த்சோ மொரிரி ஏரியை சென்றடைவோம். வழியில் ஏழு மலை கணவாய்களை ஏறியிறங்கவேண்டும்.

காலை எட்டு மணிக்கு ஸ்டான்சின்னை சென்று அவன் அலுவலகத்தில் கண்டேன். அந்த பெல்ஜியர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டார்களென்றான். நானும் பல்தேவும் மட்டும் தான். என் பையை அவன் அலுவலகத்தில் வைத்துவிட்டு பல்தேவுடன் காலை உணவு உண்ண சென்றேன்.

இருந்த வேலையை விட்டு புதிய வேலையில் சேருவதற்கு முன், இடைவெளியில் லத்தாக், மங்கோலியா மற்றும் சைபீரியாவில் பயணம் செய்ய கிளம்பியுள்ளான். இதற்குமுன் நேபாலில் எவரெஸ்ட் மலையடிவாரத்திலும் தென்னமேரிக்க ஆண்டீஸ் மலைகளிலும் நடந்த அனுபவம் கொண்டவன்.

சாப்பிட்டுவிட்டு வந்தபின் ஜீப்பில் மலைநடை சாமான்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வேறொரு வண்டியில் ஒரு ஃப்ரெஞ்சு கூட்டம் ஸ்டோக் காங்க்ரி மலையை ஏற புறப்பட்டுக்கொண்டிருந்தது. அவர்களில் ஐம்பது வயதுக்கு மேல் ஒரு பெண். ஸ்டோக்கை முடித்துவிட்டு கஷ்மீரின் நன் கன் மலைகளை ஏற உத்தேசமென்றாள். நல்வாழ்த்திவிட்டு நாங்கள் எங்கள் வழிகாட்டி மற்றும் சமையல்காரனுடன், ஜீப்பில் ரும்ஸேவுக்கு கிளம்பினோம். வழிகாட்டி தோர்ஜே. சமையல்காரன் சமீர். ஜீப் ஓட்டுனரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

தோர்ஜே, சமீர், இருவருக்கும் பத்தொன்பது இருபது வயதுக்குமேலிருக்க வாய்ப்பில்லை. தோர்ஜேவின் அடையாளங்கள், சராசரி உயரம், சுருள்மடி, எலிவால் மீசை. சமீரோ எட்டாவது படிக்கும் மாணவன் போல் உயரம். சதுர முகம். வலது காதில் தடிய கருப்பு வளைய தோடு. அரைக்கால்சட்டை அணிந்திருந்ததால் மேலும் சிறுவனாக தெரிந்தான். தோர்ஜே அதற்கு முன்தினம் தான் நூப்ரா சமவெளியில் வேறொரு மலைநடையை முடித்திருந்தான். சமீரும் லாமயூரு மலைநடையிலிருந்து எங்கள் கூட்டத்திற்குள் தாவியிருந்தான். அதெல்லாம் எங்களுக்கு பின்புதான் தெரிந்தது, ஆனால் வேலையை தொடர்ந்து செய்வதனால் வரும் ஒரு சகஜமந்தம் இன்று காலை அவர்களின் முகங்களில். அதனால் அவர்கள் எங்களுடன் பேச எந்த பேரார்வத்தையும் காட்டவில்லை. நான் காதில் இளையராஜாவின் திருவாசகத்தை மாட்டிக்கொண்டேன்.

லேவைவிட்டு ஜீப் சோக்லாம்சர், ஷே கிராமங்களை கடந்து காரூ மற்றும் த்ரிஷூல் ராணுவ முகாம்களை தாண்டியது. நாங்கள் மனாலியை நோக்கிச்செல்ல, வழிமுழுவதும் சிந்துநதி எதிர்திசையில் கார்கிலை நோக்கி, காபுலை நோக்கி, கராச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

மண்ணை தண்ணீரில் கனமாக கலந்து, கஞ்சிபோல் செய்து, அசுரனொருவன் மொண்டு மொண்டு, நிலத்தின் மேல் அதை ஊற்றிக்கொண்டிருந்தது போல. அமைதியான பூமி, தன்னுள்ளிருக்கும் அத்தனை சலனங்களையும் ஒரு பெரும் விசையாய் மாற்றி வீசி எறிகிறது. அதைத்தாங்கும் சக்தி கடலைத்தவிர வேறெதிலிருக்க முடியும்?

உப்ஷி, லேவலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு சந்தி. ஐந்தாறு சாப்பாட்டுக்கடைகள். சில வெள்ளையர்கள் மனாலிவரை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்கள். எட்டுலிருந்து பத்து நாள் நீடிக்கும் பிரயாணம். அவர்களுக்கும் இன்றுதான் முதல் நாள். அங்கு நின்று லத்தாக்கிய தேனீர் குடித்தோம். காரு முகாமின் பேருந்து ஒன்று சீக்கிய படைவீரர்களுடன் நிரம்பி வந்து நின்றது. வேறெங்கிருந்தோ முகாமுக்கு திரும்ப சென்றுகொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து வழி மெல்ல மேலே சென்றது. ரும்ஸேவை நெருங்கிவருகையில் தூரத்து பனிமலைகள் சற்று அருகில் வந்திருந்தன. ஒரு மலையின் முன்னால் ஜீப்பை நிறுத்தினோம். நடக்க ஆரம்பித்தோம். தோர்ஜே அங்கு வந்துசேர்ந்திருந்த குதிரைக்காரனுடன் பயண சாமான்களை குதிரைகளின்மேல் ஏற்ற உதவி செய்ய, நானும் பல்தேவும் சமீருடன் முன்னால் சென்றோம். சற்று தூரம் சென்றதுமே பகல் வெயிலால் பெருத்திருந்த சிறுநதி. தூரத்தில் பாலமிருந்தது. ஆனால் சுற்றிவர மேலும் அரைமணிநேரமாகும். நானும் சமீரும் கற்களின்மேல் தாவியும், அது முடியாதுபோன பிறகு குளிர்தண்ணீரில் இறங்கியும் கடந்தோம். பல்தேவ் யோசித்துவிட்டு பாலத்தை நோக்கிச்சென்றான்.

IMAG0119

முனைந்து கட்டிக்கொண்ட சப்பாத்துகளை அவிழ்க்க நேர்ந்தது. ஆனால் களைப்பூட்டும் மலைநடையின் நடுவில் வெருங்கால்களை ஓடும் பனியுருகில் நுழைத்து, கரை கடந்து வெயிலில் ஈரகால்களை காட்டிக்கொண்டு சிறிது ஓய்வெடுப்பதென்பது புத்துணர்ச்சியூட்டும் இடைவேளையாகவே இருந்திருக்கிறது.

ஒரு அகல நதிப்படுகை வழியே நடந்து சென்றோம். இருபக்கமும் உருண்டை, மொட்டை மலைகள். விசித்திர முகங்கள் போல. இன்று ஏற்றயிறக்கங்கள் பெரிதும் இல்லாத பாதை. மூன்றரை மணிநேரம் நடந்தபின் கேம்பை சென்றடைந்தோம்.

ரும்ஸே த்சோமொரிரி பாதை ஒரு லத்தாக் பிராந்திய மலை நாடோடிப்பாதை. ஆடுகளையும் யாக்குகளையும் பண்ணையாய் வளர்க்கும் மலைநாடோடிகள், இந்த வழியில்தான் கால்நடைகளை கோடைகாலத்தில் மேய்க்க கூட்டிவருகிறார்கள். இந்த பாதையில் இரு ஏரிகள் இருப்பதும், அந்த ஏரிகளை சுற்றி புல்தரைகள் இருப்பதும் தான் காரணம். ஆனால் இரு ஏரிகளின் நடுவிலும் உள்ள நிலமோ வெறும் பொட்டல் காடு. ஓநாய்களும் விஷச்செடிகளும், கியாங் எனும் லத்தாகிய காட்டு கழுதையும் உலவுமிடம். அதன் அடையாளமாக, கேம்பை சேரும் இடத்தில், குதிரை ஒன்றின் பாதி மக்கிய சடலம் நதித்தளத்தின் அருகில் கிடந்தது.

August 18, Il Forno Pizzeria, Leh, 6.40pm

IMAG0115

இன்று காலை உணவுக்குமுன் ஊரின் முன்பகுதியிலிருக்கும் சிறிய ஸ்தூபியை ஏறினேன். பழைய லே சாலையின் கீழிருந்து சில படிகளே உள்ள சிறுகுன்றின் மேல். வழியில் நிரம்பி ஓடும் சாக்கடையும் ப்லாஸ்டிக்தாள் குப்பையும். ஊரின் மூன்று ஸ்தூபிகளில் மிக அழுக்கான, கவனக்குறைவால் அழுகிக்கொண்டிருக்கும் ஸ்தூபி. மலை, குப்பையாகயிருந்தாலும் உச்சியிலிருந்து விரிந்த காட்சியில் உன்னதக்குறையேதுமில்லை. இறங்கும் வழியில் நாய்கள் மூன்று புணரும் அவசரத்தில் வழிமறைத்து நின்றன. நேரம் கழிக்க உடைந்த பியர் புட்டிகளின் அருகில் ஒரு பாறைமேல் அமர்ந்தேன். கீழே நகரம் சோம்பல் முறித்தது. ஜெட் ஏர்வேஸின் காலை விமானம் மேகங்களின் நடுவிலிருந்து நுழைந்து சிறுகுன்றுகளை சுழன்றுவந்து விமானநிலையத்தில் இறங்கியது.

மதியம் த்செமோ கோம்பா. கோம்பாவுக்கு செல்ல இருவழிகள். லேவின் பின்புறத்திலிருந்து மலையை ஏறும் சிமிட்டி பாதை ஒன்று. மற்றொன்று லேவின் பழையநகர மையத்திலிருந்து கிளம்பும் மண்பாதை. சிமிட்டிவழி ஏறி மண்பாதை வழி இறங்கினேன்.

த்செமோ கோம்பா லேவின் மிகஉயரத்திலிருக்குமிடம். அதன்மேலிருந்து ஷாந்தி ஸ்தூபியின் பிராகாரத்தையும் காணமுடியும். சிமிட்டிவழி துவங்குமிடம் எருமைகள் கட்டியிருந்தன. மண்ணும் சாணமும் கலந்த கிராமவாடை. ரோட்டிலிருந்து வளையும் பாதையை தொடர்ந்ததும் அது திடீரென்று ஒரு வீட்டுவாசலில் அபத்தமாய் முட்டி நின்றது. கூர்ந்து கவனித்ததில் கதவின் கீழே பலகையில் “கோம்பா செல்லும் வழி” என்ற மங்கிய சாக்பீஸ் எழுத்தும் வலதுபக்கத்தை சுட்டிக்காட்டும் அம்பும் தெரிந்தது. அங்கிருந்து வழி மெல்ல நிமிர்நது எழும்பி படிகளாகவும் சாய்ந்த பாதையாகவும் மலையை ஏறி கோம்பாவில் முடிகிறது.

IMAG0114

கோம்பாவின் அடிக்கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டது. செந்நிறம் வழிந்து கோம்பாவின் வாசலிலுள்ள சிறுமுற்றத்தையும் பூசிவிட்டிருந்தது. அந்த வாசலில் அமர்ந்து, இளவெய்யிலின் கதகதப்பில், குளிர்ந்த தென்றலில், ‘ஒரு புளியமரத்தின் கதை’யை படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டும் நிசப்த அமைதியை கேட்டுக்கொண்டும், நேரம்போனது தெரியவில்லை. கால்கள் உட்கார்ந்து சோர்வடைந்ததும் மண்பாதையை பிடித்தேன்.

பாதை மலையினோரம் ஒட்டியபடி கீழேசென்று முதலில், லேவை ஆண்ட நாம்க்யால் ராஜகுலத்தால் கட்டப்பட்ட அரண்மனையில் நிர்க்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட அரண்மனை. அடுத்தடுத்து கூர்மையாகவும் மொண்ணையாகவும் தென்படும் மலை திடீரென்று இயல்பாக வழவழப்பான அரண்மனைக்கட்டிடமாக உருமாறுகிறது. உள்ளே செல்ல ஐந்தே ரூபாய் தான், ஆனால் அந்நேரம் ஆர்வமில்லை. வெளியே இந்திய தொல்பொருளியல் துறையின் செய்திப்பலகையை படித்தேன். லேவின் அசல் பெயர் க்லே அல்லது ஸ்லே என்றும், பதினாறாம் நூற்றாண்டில் அங்கு வந்த மொரேவிய மிஷனரிகள் ஜெர்மன் பாஷையில் ஊரின் பெயர் நுழையாததால் லே என்று அதை மாற்றி அமைத்தார்கள் என்றும் சொன்னது. அப்படியே அரண்மனையின் சிறுமதிலை தாண்டிகுதித்து, பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து அரண்மனையின் கீழ் புழங்கும் லேவின் பழையநகர மண் கட்டிடங்கள் வழியே மார்க்கெட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கிருந்து ஷாந்தி ஸ்தூபிக்கு செல்லும் வழியில் இஞ்சி எலுமிச்சை தேனீர். The Booklover’s Retreat என்ற சிறு உணவகம். அலமாரியில் மற்ற புத்தகங்களுக்கு நடுவில் நாலைந்து கார்ஸியா மார்கெஸ். Love in the time of Cholera வின் முதல் சில பக்கங்களை படித்துவிட்டு ஷாந்தி ஸ்தூபிக்கு சென்றேன். நடையை நகரமையத்துக்கு திரும்ப வந்து முடிக்கையில் பசி பீறிட்டு கிளம்பியது.

ஏனோ இன்று த்செமோ கோம்பாவிலிருந்த அந்த மத்தியான நேரம் ஒரு அதீத அமைதியுடன் மனதில் நின்றுவிட்டிருக்கிறது. கோம்பாவிலிருந்து தெரிந்த காட்சியின் நிறக்கலவையும் கூட. வானின் பளிச்சென்ற நீலம், அதன் கீழே வெள்ளை மேகங்கள், தவிட்டு நிற மலைகள், சிவப்பு நிற கோம்பா முற்றம்.

இப்பொழுது மாலை, பொன்நிற மேகமும் பளீரென்று வெள்ளை ஜொலிக்கும் முக்கால் நிலவும். கடலிலிருந்து மூன்றறை கிலோமீட்டர்கள் உயரத்தில் விண்வெளியின் துல்லியம் கண்களை போதாமலாக்குகிறது. வானில் இருந்த பத்துப்பதினைந்து நட்ச்சத்திரங்கள் திடீரென்று நண்பர்கள் உரவினர்கள் எல்லோரையும் கூட்டிவந்துவிட்டனர்போல். உலக விந்தைகளை காணவந்த அன்னிய கும்பல். இந்த கடையின் கூரையில்லாத பகுதியில் அமர்ந்து அவர்கள் பார்வையில் என் பாட்டுக்கு இருப்பதர்க்கு கூச்சமாகவேயிருக்கிறது.

August 17, Il Forno Pizzeria, Leh, 8pm

IMAG0110நாளை மருநாள் மலைநடை ரும்ஸேவிலிருந்து துவங்குகிறது. இன்று ஏஜன்சியில் என்னுடன் மலைகளில் கூட நடக்கப்போகும் பல்தேவை சந்தித்தேன். சிங்கப்பூரில் பிறந்து (நன்றாக) வளர்ந்த பன்ஜாபி. அங்கு corporate lawyer வேலை. எங்களுடன் வேறு மூன்று பெல்ஜியர்களும் சேரப்போவதாக கேள்வி. இன்னும் அவர்களை ஸ்டான்சின் கண்ணில் காட்டவில்லை.

ஏஜன்சி நிர்வாகி ஸ்டான்சின். புரூஸ் லீ போல் ஒல்லியுருவம், மெலிந்த கண்கள், முழூ மொட்டை. லேவில் உள்ள ஏஜன்சிகளிலேயே எனக்குத் தெரிந்தவரை, அதிகம் படித்த, அதிக அங்கீகார சான்றுகள் பெற்றவன். அதனாலேயே மற்ற ஏஜன்டுகளிடம் புலப்பட்ட ஒருவகை சிற்றூர் அப்பாவித்தனம் அவனிடம் தெரியவில்லை. என்னிடம் பயண ஏற்பாடுகள் பற்றி சொல்லவேண்டிய சகஜ விஷயங்களை சொல்லிவிட்டு, ஐயையோ, சிரிக்க மரந்துவிட்டேனே, என்று திடீரென்று ஞாபகம் எட்டி, ஒட்டிய உதடுகளை அப்படியே இருபக்கத்திலிருந்தும் இழுத்து புன்னகைப்பான். அவனை நம்பத்தக்கவனாக என் மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லையென்றாலும், அவன் வழியே ஏற்பாடுகளை செய்துகொண்டதுக்கு சோம்பலே காரணம்.

உடலை பழக்கிக்கொள்வதர்க்காக லேவில்லிருக்கப்போகும் இருநாட்களிலும் தினமும் மூன்று நான்கு மணிநேரம் நடக்க வேண்டும். லேவின் புறகிராமங்களின் வழியே செல்லும் நடைபாதைகளில் முழூசுற்று வந்தாலே நல்ல பயிற்ச்சி. அதுபோக ஊரின் குன்றுகளில் குந்திக்கொண்டிருக்கும் ஸ்தூபிகளை ஏறிவிட்டால் பூமிவான தரிசனத்துடன் நுரையீரல்களும் விரிந்துவிடும்.

லேவின் வடக்குமூலையில் ஷாந்தி ஸ்தூபி. நடுநகரத்திலிருந்து சற்றே கிழக்கில் த்செமோ கோம்பா. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு அழகிய கிராமவழிப்பாதைகள். வழியில் மலைநீரூற்றினோடு விடுதிகளும் வயல்களும் ஒதுங்கிய வீடுகளும். முதலில் இன்று ஷாந்தி ஸ்தூபிக்கு சென்றேன். மார்க்கெட் ரோட்டிலிருந்து சாங்ஸ்டி ரோட்டுவழியே சாங்ஸ்பா ரோட்டை நுழைந்து, சிறுதூரம் சென்றால் கடைவாசலில் கண்ணில் கண்டவர்களுடன் ஒரு மலைநடை ஏஜன்ட் சதுரங்கமாடிக்கொண்டிருப்பார். அடுத்து மொரேவிய மிஷனரிப் பள்ளி. சிறிய வெட்டவெளியிலுள்ள திப்பெத்திய அகதிகளின் அங்காடியை தாண்டியதும் ராணுவயிலாக்கா. அங்கிருந்து பாலம் வரையில் விடுதிகளிலும் ரோட்டிலும் இஸ்ரேலியத் திரள். ஏஜன்சிகளின் வாசலில் மலைநடைகளுக்கான ஆள் திரட்டும் நோட்டீசுகள் கூட ஹீப்ரூ மொழியில். பாலத்தினடியில் பாறாங்கற்க்களில் மோதி நகரத்தை ஊடுறுவி, கடந்து, கார்கில் நெடுஞ்சாலையின் அருகில் சிந்துநதியுடன் இணையும் சிறுநதியை தாண்டிய பின்னர் லே நகர பால்பண்ணை. வெளியே மாட்டியிருக்கும் பலகையின்படி பனிக்காலத்தில் காலை எட்டறைமணிக்குத்தான் பால் விற்க்கத்துவங்கும். சாலை அங்கே முட்டுமிடத்தில், ஷாந்தி ஸ்தூபியின் மலையடி. படிகள் துவங்கும் நுழைவாய்.

IMAG0117சென்றமுறை லேவிலிருந்த ஆறேழு நாட்களும் தினமும் மாலையில் ஷாந்தி ஸ்தூபிக்கு சென்றேன். அதன் மேலே பிராகாரத்திலிருந்து மேகமூட்டமில்லாதன்று தெற்க்கே மனாலிவழி இமயங்களையும், மேற்க்கே ஸ்டோக் காங்க்ரி மலையுச்சியையும், காலடியில் முழூ லே நகரத்தையும் காணலாம்.

ஸ்தூபியை ஏறும்பொழுது படிகளை முதல் தடவையாய் எண்ணி மூச்சிரைத்து ஐநநூற்றி நாற்பத்தி நாலென முடித்தேன். ஒவ்வொரு இருபது படிகளுக்கும் ஏறும் மும்முரத்தை மரந்து திரும்பினேன், நகரம் மெல்ல தாழ்ந்திருந்தது. மேலே திண்ணையில் அமர்ந்து இவான் இல்யிச்சின் துயரத்தை ஒவ்வொரு பக்கம் படித்துவிட்டும் அதை ஜீரணித்துக்கொள்ள, என் முன் விரிந்திருந்த காட்சியை பார்க்க கண்கள் தானாய் நிமிர்ந்தன.

August 16, Pumpernickel German Bakery, Leh, 7.40pm

imageடெல்லியிலுருந்து லே செல்லும் என் ஏர் இந்தியா விமானம் தாமதமானது. விடைபெறும் நேரம் மூன்று முறை மறு அறிவிப்பு செய்யப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்தே செய்யப்பட்டது. லேவில் செயற்கை திசைநோக்கியில்லாததால் ஊரின்மேல் மேகமூட்டமிரருக்கும்பொழுது விமானநிலையத்தில் சரியாக இறக்கம் செய்யமுடியாதாம்.

லேவின் வானில் சூரிய விளையாட்டை காணமுடியாதென்பது பிடித்தக்குழந்தையை பார்க்கச்சென்றுவிட்டு அதுவோ தூங்கிக்கொண்டே இருப்பதுபோல. விமானமில்லை. என்னதான் செய்யமுடியும்.

ஏனோ எனக்கு மற்ற வாடிக்கையாளர்கள்போல விவாதிக்கவோ விசாரிக்கவோ மனம்வருவதேயில்லை. அமர்ந்திருந்த சிலர் ஏரிந்தியா நிர்வாகிகளிடம் சென்று பேசியதை ஒட்டுக்கேட்டதில் நம்பிக்கை பிறந்தது. ராணுவ படை வீரர்களும் எங்களுடன் பயணம் செய்யவிருந்ததால் விமானத்தை ரத்து செய்யாமல் தாமதாகவே கிளப்பமுயல்வார்களாம். ஐந்து மணிநேரம் தாமதம் அறிவிக்கப்பட்டது.

இருந்த மற்றவர்களின்மேல் கண்களை ஓட்டியதில் லேவுக்கு பொதுவாக செல்லும் அத்தனை தினுசுகளும் தென்பட்டன. கைகளில் புதுமண தம்பதியர்களென்று வளையல்வரிசை, மருதாணிபோல் அறிகுறிகளை வைத்துக்கொண்டிருந்தவர். தலைமுடியை ஒட்டிவெட்டிக்கொண்டு வெள்ளை சட்டையும் கறுப்பு கால்சட்டையும் அணிந்து, வளர்ந்த பள்ளி மாணவர்கள்போல் காட்சியளித்த ராணுவ படை வீரர்கள். இருக்கைகள் காலியாக இருந்தும் விமானநிலைய கண்ணாடி ஓரங்களில் முதுகை சாய்த்துக்கொண்டு காலை நீட்டிக்கொண்டு தரையில் தான் அமருவோமென்ற வெள்ளை ஹிப்பி கும்பல். பனியன்கள், பச்சைக்குத்தல்கள், சுருள்முடி, சுருளவைத்தமுடி, கித்தார்கள் மற்றும் ரப்பர் காலணிகளின் குவியல். அவர்களை தவிர்த்து வேரொரு ஈட்-ப்ரே-லவ் பிறிவு. முப்பதை தாண்டிய வெள்ளையர்கள், ஐம்பதை தாண்டிய தம்பதியர் இத்யாதி.

வெளியே டெல்லி, முழூமேகமூட்டத்துடன் மந்தமாய். சூரியனை காணவில்லை. டெல்லியை நான் மழைப்பருவத்தில் கண்டதில்லை. ஒன்று, உயிரின் வேர்வரை கொளுத்தும் வெக்கை. அல்லது, உறையவைக்கும் குளிர்.

ஒருவழியாக கிளம்பிவிட்டோம். அடைத்துவைக்கப்பட்ட சூரியனை, பத்தே நிமிடத்தில் மேகமூட்டத்தை எய்து எழும்பி வந்து தரிசித்தோம். மேகப்பரப்பின் கீழ் இருள்மந்தம். மேலே ஒளி நிரம்பிய குமிழி. வழி முழுவதும் பூமி மேகமூடியின்பின். சில இடங்களில் மூடி கிழிந்து பனிமலைகளின் பகுதிகள் தெரிந்தன. வழியில் விமானஓட்டுனர் அறிவிப்பில், மேகங்களின் நடுவில் ஓட்டை ஒன்றை கண்டுபிடித்து லே சமவெளியில் அதுவழியே நுழையும் உத்தேசம் என்றார். நுழைந்தும் விட்டார். தவிட்டுநிற மலைகள், மலைகள் கீழிறங்கி சிந்து சமவெளியை வருடும் இடங்களில்லெல்லாம் நெட்டை போப்லர் மரக்குவியல்கள், நெளியும் சிறுநதிகள், வீடுகள். சென்றமுறை ஓரிரு தடவைகள் ஏறிய ஷாந்தி ஸ்தூபியும் த்செமோ கோம்பாவும் குன்றுகளின்மேல் ஊர்க்காவல் நின்றன. நகரத்தின் பின்பகுதியிலிருந்த லாம்டன் பள்ளி தன் வளாகத்தின் பக்கத்து மலையின்மேலிருந்து தன் பெயரை அறிவித்தது.

சென்றமுறை மார்க்கா சமவெளி நடைப்பயணத்தை முடித்தபிறகு பால் விருந்தினர் விடுதியில் இரண்டு நாட்க்கள் தங்கியிருந்தேன். சிறு தோட்டம், பலவண்ணப் பூக்கள், ஆப்ரிகாட் மரங்கள் கொண்டது. தோட்டத்தை பார்த்தார்போல் அறைகள். சாங்ஸ்டி ரோட்டில் ஒரு மூலையில். விமான நிலையத்திலிருந்து வாடகைவண்டி அமர்த்திக்கொண்டு பாலின் முன்னால் வந்திறங்கினேன். சென்றமுறை நாளுக்கு ஐந்நூறு குடுத்ததாக ஞாபகம். இம்முறை எழுநூறு கேட்டார்கள். வெளியே வந்து அதே சந்தில் ஓரத்தில் ஓடும் மலையூற்றை தொடர்ந்தால் உள்ளே பீஸ் விடுதி. அதேபோல் சிறுதோட்டத்துடன். தோட்டத்திலிருந்து அறைக்கு செல்லும் சிமிட்டிவழியில் பழுத்த இரு ஆப்ரிகாட்டுகள் காற்றில் உருண்டுகொண்டிருந்தன.

விடுதியை நிர்வாகிக்க முதலாளி விட்டுச்சென்ற ஆள், பதின்பருவ சிறுவனென்றே சொல்லவேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் தொப்பி அணிந்த வெள்ளை உருண்டை முகம். முக்கால் கால்சட்டை. பத்தானிய முகவடிவமும், திப்பெத்திய முகவடிவமும் சரிபாதி சேர்ந்த கலவை. இங்கு பொதுவாக எல்லோரும் அயல்நாட்டுக்காரர்களிடம் பழகி ஆங்கிலம் பேசுவார்கள். நான் பரீட்ச்சித்து பார்த்ததும் உருது தெரியுமா என்று விசாரித்தான். அதன் பிறகு அவன் உருது என்று நம்பிய ஹிந்தியை பேசி சமாளித்துவிட்டேன்.